பதிவு:2022-06-14 21:19:19
தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர் ஜூன் 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி தள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கடந்த 2018 -ல் தேர்வு செய்து, அதற்கான பணி ஆணையும் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஊராட்சிகள் தோறும் ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் மூலம் பணி ஆணையும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாளே பணி ஆணையும் திரும்பவும் பெறப்பட்டது. தற்போதைய நிலையில் இப்பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை அறிந்திருப்பதாகவும் அதனால், மீண்டும் பணி ஆணை வழங்கக்கோரி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.