பதிவு:2025-08-13 11:52:52
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஆக 13 : அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்டங்கள் அனைத்திலும் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 20.08.2025, 21.08.2025 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை நடைபெறவுள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு பேர் (இதற்கு முன்னர் இப்பயிற்சிகளில் பங்கேற்காத உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையிலுள்ள பணியாளர்கள்) இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், ஒப்பமிடுதல் வேண்டும் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப் பெறும்.
ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கில் கோட்டம், மாவட்டம், வட்டம் மற்றும் சார் நிலைகளில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.