பதிவு:2025-08-16 19:08:48
தரணிவராகபுரம் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் :
திருவள்ளூர் ஆக 16 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரணிவராகபுரம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு,தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியம் – உயிரி பல்வகைமை மேலாண்மைக் குழு செயல்பாட்டை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
கிராம சபை கூட்டமானது வருடத்திற்கு 6 முறை நடைபெற்று வருகிறது மேலும் சில காரணங்களால் சிறப்பு கிராம சபைகள் நடைபெறும். தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கிராமப் பகுதியில் அதிக அளவு வளர்ச்சி கண்டுள்ளது சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பொதுமக்களாகிய நீங்கள் தூய்மை பணியாளர்கள் வரும்பொழுது மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் இவ்வாறு நீங்கள் பிரித்து வழங்கும் குப்பைகள் மக்கும் குப்பை உரமாகவும் , மக்காத குப்பைகளான நெகிழி கழிவுகள் அரைத்து சாலை அமைப்பதற்கு போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது வெளிப்புறங்களில் மலம் கழிப்பதால் தொற்று நோய் உருவாவதற்கு காரணமாக அமையும் ஆகவே பொது மக்களாகிய நீங்கள் கழிப்பறையை உபயோகிக்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தை பேணி காப்பதில் இரு கண்களாக இருக்க வேண்டும். எனவே உங்கள் கிராமத்தை தூய்மையான கிராமமாக திகழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.