பதிவு:2025-09-10 11:24:47
அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 69 லட்சம் பணம் மோசடி : எஸ் பி அலுவலகத்தில் புகார் :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாரிசா. அவரது கணவர் முகம்மது அபுபக்கர் மற்றும் மகன் ஜெபியுள்ளா ஆகியோர் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (55) என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அவர்களிடம் கடந்த 2024 ம் ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமி ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அசல் மற்றும் லாபத் தொகையும் சேர்த்து அவர்கள் 3 பேரும் ஒரு மாதத்தில் ரூ. 2.10 லட்சம் கொடுத்துள்ளனர்.அதன்பின் அதிக அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து விஜயலட்சுமி ரூ. 53.30 லட்சம் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகையையும் கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து லாபத்தொகையை மட்டும் கொடுத்து வந்துள்ளனர்.
பிறகு கடந்த 2025 ம் ஆண்டு முதல் அசல் தொகை மற்றும் லாபம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.ஒரு கட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மூலம் மிரட்டியுள்ளனர். மேலும் போலீசுக்கு போனால் பணத்தை வாங்க முடியாதென்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.இதேபோல் லீலாவதி என்ற பெண்ணிடம் பாரிசா அதிக லாபம் தருவதாக கூறி ரூ.16 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 2025 ஜூலை 7 ம் தேதி மாவட்ட போலிஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தாங்கள் எங்களது புகார் மனு மீது விசாரணை நடத்தி ரூ. 69.30 லட்சம் பணத்தையும் ஒன்றரை பவுன் தங்க நகையையும் மீட்டு தர வேண்டும். எங்களை ஏமாற்றிய பாரிசா, முகம்மது அபுபக்கர், ஜபியுள்ளா மற்றும் பாலாஜி ஆகிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று விஜயலட்சுமி மற்றும் லீலாவதி ஆகியோர் புகார் மனு அளித்தனர்.