பதிவு:2025-09-24 15:16:09
உளுந்தை கிராமத்தில் மூன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கேட்டரிங் மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: ரூ 35 ஆயிரம் அபராதம் : ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை :
திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கேட்டரிங் மாஸ்டருக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது வீட்டு அருகில் கேட்டரிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் மாஸ்டராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஜூன் மாதம் மூன்றரை வயது குழந்தை மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சாக்லேட் தருவதாக கூறி மூன்றரை வயது குழந்தையை மாஸ்டர் பிரபாகரன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தையின் தந்தை டில்லிபாபு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவள்ளூரில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செயல்பட தொடங்கியதையடுத்து வழக்கு விசாரணை அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் டி. விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடைபெற்று நீதிபதி உமா மகேஸ்வரி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் மூன்றரை வயது குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மூன்றரை வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும், என மொத்தம் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும் குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.50 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி உமா மகேஸ்வரி பரிந்துரை செய்தார். தீர்ப்புக்கு பின் பிரபாகரனை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.