பதிவு:2025-09-25 12:09:54
செஞ்சி கிராமத்தில் ஏரியின் நடுவில் பெட்டி பெட்டியாக ஆழப்படுத்திய ஹிட்டாச்சி எந்திரங்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி சமமாக தூர்வார பொதுமக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே செஞ்சி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் நீரால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஏரிக்கு காவேரி ப்பாக்கம் ஏரியிலிருந்தும் தண்ணீர் நிரம்பி இந்த வழியாக வருவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஏரியை முழுவதும் சமமாக தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு மனுக்கள் அளித்து வரும் நிலையில் தற்போது இரண்டு இட்டாச்சி எந்திரங்களை வைத்து ஏரியின் நடுப்பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டுவதாகவும் இதனால் தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி நின்று மற்ற இடங்களுக்கு பரவாத நிலை ஏற்படும்.
இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்றும் விவசாயத்திற்கும் பயன்படாத நிலை ஏற்படும் என்றும் கூறி ஏரியை சமமாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தி ஹிட்டாச்சி எந்திரங்களின் பணியை சமூக ஆர்வலர் தடுத்து நிறுத்தினார். மேலும் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதையடுத்து ஏரியின் நடுவே ஆழப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில் இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.