பதிவு:2022-06-15 16:02:26
ஆர்.கே.பேட்டையில் ஜமாபந்தி நிறைவு நாளில் 207 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஜூன் 16 : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நிறைவு நாளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, 207 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், முழு புலம் பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1431-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. அந்த வகையில், ஆர்.கே.பேட்டை வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 07.06.2022 முதல் 14.06.2022 வரை நடைபெற்றது. இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து உட்பிரிவு பட்டா மாற்றம், முழு புலம் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கணினி திருத்தம், ஆக்கிரமணம், கணினி பதிவேற்றம், இதர துறைகள் சார்ந்த மனுக்கள் என 629 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதனடிப்படையில் 207 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், முழு புலம் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், மீதமுள்ள மனுக்கள் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும்.
அதனைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 8,820 மதிப்பீட்டிலான விசைத்தெளிப்பான் ரூ.3,000 மானியத்தில் ஒரு பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் லோ.தமயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.