பதிவு:2022-06-17 12:50:29
திருவள்ளூர் அருகே ரூ.7.50 லட்சம் வழிப்பறி : ஹெல்மெட் ஆசாமிகள் கைவரிசை : மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் டிசிஎல். கம்பெனி அருகில் வசித்து வருபவர் பிரகாஷ் (37). கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இங்கு வீடு கட்டி குடி புகுந்துள்ளார்.இவர் மணவாளநகரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை மூடிவிட்டு ரூ.7.50 லட்சத்தை ஒரு பையிலும் இரண்டு லட்சம் ரூபாயை தனது பேண்ட் பாக்கெட்டிலும் வைத்துக் கொண்டு 9 மணியளிவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மேல்நல்லாத்தூரில் வேகத்தடை அருகே செல்லும் போது வாகனத்தை மெதுவாக இயக்கிய போது பின்னால் இரண்டு இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பிரகாஷ் கையில் பணம் வைத்திருந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.இதனால் நிலை குலைந்த பிரகாஷ் செய்வதறியாது தவித்துள்ளார்.இது குறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி. சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாள்தோறும் கடையை மூடிவிட்டு பணத்தை எடுத்துச் செல்வதை அறிந்த மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பிரகாஷ் தனது பான்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் தப்பியதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.