பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி தற்கொலை சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது

பதிவு:2022-06-21 11:01:48



திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமத்தில் பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி தற்கொலை  சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஹேமா மாலினி (22) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஹேமமாலினி திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி அவரை அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று ஹேமமாலினியின் உறவினர்கள் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்து கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று முனுசாமி என்ற சாமியாரிடம் பூஜை செய்ய சென்றுள்ளனர். இரவு அங்கேயே தங்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து ஹேமமாலினி தனது உறவினர்களுடன் தங்கினார்.அவருக்கு அன்று இரவு பூஜை செய்த நிலையில் மறுநாள் ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோயிலின் சாமியார் முனுசாமி திட்டம் போட்டு இறந்து போன மாலினியை அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு அப்பெண்ணிற்கு நாக தோஷம் இருப்பதாக அந்த பெண்ணிடமும், அவரது பெற்றோரிடமும் பொய் சொல்லி அந்த கோவிலுக்கு அடிக்கடி வரவழைத்து பூஜை செய்வதாக கூறி தன்வசப்படுத்தி அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு பாலியல் வன்கொடுமையால் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சாமியார் முனுசாமியை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் மற்றும் காஞ்சிபுரம் குற்றப் புலனாய்வுத்துறை சரக துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.