பதிவு:2022-06-27 12:35:56
ஆவடியில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” சார்பாக தூய்மைப்பணி மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழிப்புணர்வு :
திருவள்ளூர் ஜூன் 27 : ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” சார்பாக தீவிர தூய்மைப்பணி மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களிடையே பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தீவிர தூய்மைப்பணி ஏற்படுத்தும் வகையில்; மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து குப்பை சேகரிக்கும் பணியையும், மரக்கன்றுகளை நடவு செய்து, மாநகராட்சி மூலம் தூய்மை செய்யும் பணிகளை துவக்கி வைத்து,பார்வையிட்டு பேசினார்.
ஆவடி மாநகராட்சியில் நான்காவது முறையாக இம்முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுக்க அவர்களுக்கு குப்பை கூடைகள் வழங்கப்பட்டுள்ளது. மஞ்சப்பை திட்டம் தொடர்பாகவும், ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிவரும் கால கட்டத்தில் இதுபோன்ற மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது ஏறக்குறைய 20 செ.மீ. மழை பொழிந்தது. அதேபோன்று வருமுன் காப்போம் என்ற உணர்வின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை கூட்டத்தை கூட்டி அதற்கான பணிகளை செய்ய ஆங்காங்கே இருக்கும் கால்வாய்களை தூர்வாரப்பட்டது. மேலும், நீர்வரத்து பகுதிகளை ஆழப்படுத்தியும், நீர்நிலைகளில் நீர்வரத்துகள் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டது. மேலும், “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” மூலமாக தீவிர தூய்மைப்பணிகள் ஏற்படும் வகையில் மாநகராட்சி சார்பாக தூய்மை செய்யும் பணிகள்; துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக அனைத்து பகுதி மக்களும் பயன்படுத்தி, தங்கள் வீட்டையும், வீடு உள்ள பகுதிகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” சார்பாக தீவிர தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்து, மரக்கன்றுகள் நடும் பணிகளையும், தீவிர தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் “எனது குப்பை எனது பொறுப்பு”, “எனது நகரம் தூய்மையான நகரம்”;, “சுற்றுப்புறத் தூய்மை சுகாதாரத்தின் மேன்மை” என்ற கையெழுத்து இயக்கத்தில்; கையெழுத்திட்டு, தூய்மைக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், மண்டல குழுத் தலைவர் அமுதா பேபி சேகர், ஆவடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.அப்துல் ஜாபர், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.