பதிவு:2022-03-16 22:22:24
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதலாவது புத்தக கண்காட்சி வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முதலாவது புத்தக கண்காட்சி வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விளம்பர பதாகைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை முதன்முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டை சேர்ந்த பேச்சாளர்கள் கலந்துக்கொள்ளும் சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.