பதிவு:2022-07-01 13:15:58
ஆவடி அருகே ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்து விற்பனை : நிலத்தை மீட்டுக் தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி புகார்
திருவள்ளூர் ஜூலை 01 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மனைவி செல்வி (60) இவர்களுக்கு வெங்கடேசன், ஜெய்சங்கர் என்ற 2 மகன்களும், மகாலட்சுமி, முனிலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். விவசாயியான இவர் தண்ணீர்குளம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த 2013-ல் நாகன் உயிரிழந்த நிலையில் தற்போது இவரது நிலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் வாங்கி விட்டதாக கூறி நிலத்தை அளவீடு செய்ய வந்துள்ளார்.
அப்போது அவர்களை அளவீடு செய்ய விடாமல் தடுத்து தங்களிடம் உள்ள ஆவணங்களை காண்பித்துள்ளனர். அப்போது எஸ்.ஜே.அசோசியேஷன் பிளாட் பிரமோட்டர் என்ற நிறுவனத்திடமிருந்து ஜீவா மற்றும் தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன் ஆகியோர் நிலத்தை அங்கீகாரம் (பவர்) பெற்று விற்பனை செய்ததாக போலியான ஆவணத்தை காண்பித்துள்ளனர். இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாகனின் மனைவி மூதாட்சி செல்வி என்பவர் புகார் மனு ஒன்ளை அளித்துள்ளார்.
அதில் தனது கணவர் 2013-ல் இறந்த நிலையில் 2010-ல் 68 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய பவர் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் யாருக்கும் என் கணவர் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்கவும் இல்லை என்றும், அவர் இறந்த பிறகும் நாங்களே ஆண்டு அனுபவித்து வரும் நிலையில் எங்களது நிலத்தை போலியான ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்யும் மோகனையும்,போலி ஆவணம் தயாரித்த ஜீவா மற்றும் தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஒரு கோடியை 20 லட்சம் மதிப்பிலான 68 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.