பதிவு:2022-07-01 13:18:19
திருவள்ளூர் நகர் மன்றக் கூட்டம் : திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அமாவாசை தினங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கவுன்சிலர் ஜான் கோரிக்கை
திருவள்ளூர் ஜூலை 01 : திருவள்ளூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம் ஆர் மன்ற தலைவர் உதய மலர் பொன்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்
இக்கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள தூண்களில் கட்டப்பட்டுள்ள தனியார் கேபிள் டிவி ஒயர்கள் தொங்குவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் கம்பங்கள் சேதம் அடைவதை தவிர்க்கவும் கேபிள் வயர்களை அகற்றுதல் மற்றும் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 12-வது வார்டு கவுன்சிலர் தாமஸ் பேசும் போது வார்டு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்தி தர வேண்டும். பல தெருக்களில் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதால் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. ஆகையால் அந்த குற்ற சம்பவங்களை தடுக்க தெரு விளக்குகளை சீராக அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். 8 மாதத்திற்கு முன்பே தெரு விளக்கு சம்மந்தமாக டெண்டர் விடப்பட்ட நிலையில் இது வரை செயல்பாட்டில் வரவில்லை என தெரிகிறது. எனவே தெருவிளக்குகளை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து 11-வது வார்டு கவுன்சிலர் ஜான் பேசும்போது திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அமாவாசை தினத்தன்று நகராட்சி சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் நகர மக்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை விட முடியாமலும் வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் எனவே இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், 11-வது வார்டில் நாய் தொல்லை அதிகளவில் இருப்பதோடு, சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொது மக்களை கடித்துவிடும் அபாயமும் இருக்கிறது.
ஏற்கனவே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வந்த நிலையில் அதனை மீண்டும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 201 என்ற திருப்பதி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் சேதமடைந்து இதில் கழிவு நீரும் கலந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக அதனை சீர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதே போல் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதால் அவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், அது குறித்து கேட்கும் நபரை வேறு இடத்திற்கு மாற்றி கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதால் தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நகரையே தூய்மையாக வைத்திருக்கும் அவர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுவதை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் அய்யூப் அலி பேசும்போது அதிக பரப்பளவை கொண்டுள் இந்த வார்டில் தூய்மை பணிக்கு ஆள் பற்றாக்குறையால் ஆங்காங்கே குப்பைகளும் கழிவுநீரும் தேங்கியுள்ளது எனவே கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.23-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் பேசும் போது, திருவள்ளூர் ஆவடி சாலையில் உள்ள ராக்கி திரையரங்கம் உள்ளது. அந்த திரையரங்கில் 2 ஸ்கிரீன் இருப்பதால் நாள்தோறும் 8 காட்சிகள் இங்கு திரையிடப்படுகிறது. இதனால் 8 காட்சிகளுக்கு காரில் வரும் நபர்கள் திரையரங்கின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மழை நீர் கால்வாயை ஆக்கிரமித்து அதில் சிமெண்ட் தளம் போட்டு கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதாகவும், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் வரி வசூல் செய்வதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் நகராட்சி நிர்வாக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முக்கிய சாலையில் வாகனங்களை அதிகளவில் நிறுத்திவைப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
6-வது வார்டு உறுப்பினர் பிரபாகர் பேசும் போது, பட்டரைப் பெரும்புதூரிலிருந்து வீரராகவர் கோயிலுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக வீரராகவர் கோயில் பின்புறம் சாலையை தோண்டி பைப் அமைக்கப்பட்டது. ஆனால் தோண்டிய சாலையை சீரமைக்காமல் இருப்பதால் பஜார் வீதிக்கு வரும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோயில் நிர்வாகம் இதற்காக எந்த செலவையும் ஏற்க தயாராக இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சாலையை சீர்மைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும் போது, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.