பதிவு:2022-07-03 13:38:08
திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விவசாயிகளோடு கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆடிப்பட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள் மற்றும் நாற்றுக்கள் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டங்களில் மானிய விலையில் வழங்க ஏதுவாக நடப்பு மாதத்தில் கத்தரி (உஜாலா) குழித்தட்டு நாற்றுகள் 2,50,000 எண்கள் முதற்கட்டமாக உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக ஆடிப்பட்டத்திற்கு தேவையான கோ.8 பச்சைப்பயறு விதைகள் 60 மெட்ரிக் டன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப மானிய விலையில் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்; 141 கிராம பஞ்சாயத்துக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த கிராம பஞ்சாயத்துக்களிலுள்ள விவசாய பெருமக்கள் அனைவரும் இத்திட்டத்தில்; முழுமையாகப் பங்கு பெற்று தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற சம்மந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் இ சேவை மையம் தொடங்க விரைவில் ஆவணம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் மீனவர்கள் மீன்வியாபாரம் மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும் (ரூ.119576 -1 எண்), ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியத்திலும் (ரூ.179364 -1 எண்), குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனம் (முழு விலை ரூ.298940-1 எண்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட ஆட்சியர் முதன் முறையாக ரூ.1,79,364 மானிய விலையில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தினை தேவம்பட்டு கிராம மீனவருக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் ஆடிப்பட்ட சாகுபடிக்கு தேவையான பயறுவகை விதைகள், காய்கறி விதைகள், மல்லிகை நாற்றுகள் ஆகிய வேளாண் இடுபொருட்களை ரூ.22,670 மானிய விலையில் 7 விவசாயிகளுக்கும், கூட்டுறவுத்துறையின் மூலம் கரும்பு மற்றும் நெற்பயிருக்கான பயிர்கடன் 5 பயனாளிகளுக்கு ரூ.3,45,460 கடனுக்கான ஆணையினையும் வழங்கினார்.தொடர்ந்து, ஆடிப்பட்டத்திற்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காட்சிபடுத்தப்பட்டதையும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்ட விதைகள் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் அடங்கிய காண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில்,புதுமாவிலங்கை கிராமத்தில் வண்டிப் பாதை அகற்றுதல், கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் கூட்டத்தினை முறைபடுத்தல்,திருத்தணி சர்க்கரை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுகூட்டம் நடத்தவும் சர்க்கரைஆலையில் பின்பற்றும் ஒதுக்கீடுமுறையினை நிறுத்தி வைத்தல். மாம்பாக்கம் தடுப்பணை கட்டுதல் மீன்வளர்ப்பிற்காக ஏரித்தண்ணீpரை வெளியேற்றுவதை நிறுத்துல் பயிர்கடன் உரிய காலத்தில் வழங்குதல் நில அளவை பணி விரைவில் முடித்தல் செங்கல் சூளை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் நிலுவையிலுள்ள கரும்பு கிரைய தொகையை உடனடியாக வழங்குதல் மோவூரில் விவசாய நிலத்தில் செயல்படும் இறால் பண்ணையை அகற்றுதல் பஞ்சமி நிலங்களை மீட்டு தருதல் முதலிய கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் முன்வைத்தனர்.
மேலும், திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் “ஆடிப்பட்டம் - தோட்டக்கலைப்பயிர் சாகுபடி முறைகள்” குறித்த விளக்க காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன். வேளாண்மை இணை இயக்குநர் பி.கோல்டி பிரேமாவதி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜே.மலர்விழி, நுண்ணீர்ப் பாசன வேளாண்மை துணை இயக்குநர் வெ.தபேந்திரன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.