பதிவு:2022-07-03 13:42:13
வீட்டிலிருந்தபடியே ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பாக 2022-ம் ஆண்டிற்கு ஓய்வூதியர்களுக்கான நேர்காணலையும், வீட்டிலிருந்தபடியே ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.
ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி சம்ர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும்.தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளத்தை பயன்படுத்தி இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால்துறை பணியாளர் மூலமாக ரூ. 70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் பதிவு செய்து, ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம் அல்லது அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.
இது ஒரு முன் மாதிரி திட்டமாகும். மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி, நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.இதில் திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி,மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கௌரி, கூடுதல் கருவூல அலுவலர் து.மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.