பதிவு:2022-07-06 14:22:27
புதுசத்திரம் பகுதியில் 100 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வெள்ளாடுகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், புதுசத்திரம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 19,040 வீதம் ரூ. 19,04,000 மதிப்பீட்டிலான இலவச வெள்ளாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.
தமிழகத்தில் ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரின் வாழ்வாதரத்தை மேம்படுத்துகின்ற வகையில் அறிவிக்கப்பட்ட உன்னத திட்டமான ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவை பெண்களுக்கான இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் ஆகும்.
இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த திட்டம் ஆகும்.இந்த திட்டம் திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 14 ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் என்ற முறையில் 1,400 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் படி திருவள்ளுர் மாவட்டத்தில் 1,400 பயனாளிகள் என்றிருந்த எண்ணிக்கை தற்பொழுது 1,600 பயனாளிகளாக நம் மாவட்டத்தில் உயர்த்தி இந்த வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசின் கணக்குப்படி இந்த திட்டம் மூலமாக இரண்டு ஆண்டுகளில் 20 ஆடுகள் கொண்ட ஒரு பண்ணை உருவாக்கும் விதமாக 5 ஆடுகளால் அமைய முடியும் என்பது அரசு துறை சார்பாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு வழங்கியுள்ள இந்த திட்டத்தை அனைவரும் முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்விழாவில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அ.வெங்கடரமணன், கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.