பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோயை இலவசமாக பரப்பும் பூந்தமல்லி நகராட்சி-பள்ளிவாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெற்றோர் அச்சம்

பதிவு:2022-07-07 20:39:00



பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோயை இலவசமாக பரப்பும் பூந்தமல்லி நகராட்சி-பள்ளிவாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெற்றோர் அச்சம்

பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோயை இலவசமாக பரப்பும் பூந்தமல்லி நகராட்சி-பள்ளிவாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெற்றோர் அச்சம்

திருவள்ளூர் ஜூலை 07 : பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு, மேல்மாநகர் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் பூந்தமல்லி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மழைக்காலங்களிலும், கோடைகாலத்திலும் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளி வாசல் முன்பும் தெருவிலும் ஆறாக ஓடுவதால் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் இந்த கழிவு நீரில் கால் நனைத்தபடி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோல் சம்பந்தமான வியாதிகளும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது தற்போது மழை பெய்ததால் மழை நீரோடு கழிவுநீர் அதிக அளவில் தேங்கி பள்ளி வளாகம் முழுவதும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அதில் கால்களை நனைத்தபடி நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். பள்ளிக்கு கல்வி கற்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் இலவசமாக தொற்று நோயும் பரப்பும் சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.