பதிவு:2022-07-09 09:37:53
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பூணிமாங்காடு, பீரகுப்பம், தும்பிகுளம், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கே.ஜி.கண்டிகையில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்பொழுது பூணிமாங்காடு, பகுதியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்; மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீரகுப்பம், தும்பிகுளம், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும், திருத்தணி நகர சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அச்சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்றும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் போது இளம் வயதில் காப்பிணி ஆவது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும், மகப்பேறு இறப்பை தடுப்பது குறித்தும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகை போன்ற சிக்கல் உள்ள கர்ப்பிணிகளை முறையாக பரிசோதனைகளுக்குட்படுத்தி தொடர் கவனிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், மகப்பேறு மற்றும் சிசு மரணத்தை தடுப்பது குறித்தும், இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை கண்டறிந்து பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் தனி கவனம் செலுத்துமாறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி, ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் திருவள்ளூர் சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குநர் கு.ரா.ஜவஹர்லால், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கார்த்திகேயன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவிஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர்கள் பிரகலாதன் (திருவாலங்காடு),தனஞ்செழியன் (திருத்தணி), மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.