பதிவு:2022-07-09 11:59:14
வெள்ளியூர் கிராமத்தில் ஏரி நிலத்தில் நெற்பயிர் விவசாயம் மூலம் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு : ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவள்ளூர் வட்டாட்சியர் அதிரடி
திருவள்ளூர் ஜூலை 09 : தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அறிவுரையின் படி அகற்றி வருகின்றனர்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் வட்டம் எண். 32 வெள்ளியூர் கிராமம் புல எண்.274 மொத்த விஸ்தீரணம் 105.86.00 ஹெக்டேர்ஸ் ஏரி நிலத்தில் நெற்பயிர் விவசாயம் மூலம் சுமார் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அகற்றப்பட்டது.
நிலத்தை பராமரிக்க நிலம் அருகே அமைக்கப்பட்ட குடிசையும் அகற்றப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1 ஏர்ஸ் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது அரசுக்கு சொந்தமான இடம். இங்கு யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை வட்டாட்சியர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் ச.தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜீனத் பேகம் ஆகியோர் ஈடுபட்டனர்.