பதிவு:2022-07-09 12:02:30
திருவள்ளூர் அருகே ரூ.1.20 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி மூலம் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக விவசாய கிணறுகளில் மோட்டார், வீடுகளில் வீட்டு உபயோகப்பொருள்கள் பழுதாகும் நிலையேற்பட்டது.
அதனால் தடையின்றி மின்விநியோகம் செய்யும் வகையில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்க திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அக்கோரிக்கையை ஏற்று கட்டாயம் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ தொடர்ந்து மின்வாரியத்திடம் வலியுறுத்தியதின் பேரில் கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் புதிதாக உயர் அழுத்த 16 மெகாவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கவும், இதற்காக ஒரு கோடியே 19 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் பழைய உயர் மின் அழுத்த மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிதாக மின்மாற்றி நிறுவுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது.இந்த நிலையில் கசவ நல்லாத்தூர் துணை மின் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணை மின்நிலைய செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர் அழுத்த மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார்.
உயர் அழுத்த மின்மாற்றி புதிதாக நிறுவப்பட்டுள்ளதால், இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான மின்சாரம் வசதி கிடைக்கும். இதன் மூலம் கூடுதலாக வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு தாரளமாக வழங்கக் கூடிய நிலையேற்பட்டுள்ளது. திருவாலங்காடு மணவூர் சின்னக்களக்காட்டூர் பெரிய களக்காட்டூர் குப்பம் கண்டிகை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ்,மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ். ஹரி கிருஷ்ணன். உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், எஸ்.ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், சீத்தாராமன், தொ.மு.ச திட்ட துணை செயலாளர் தயாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.