பதிவு:2022-07-12 15:26:19
திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூர் ஜூலை 12 : உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி மக்கள் தொகை உறுதிப்படுத்துதல் வாரமாக 11.07.2022 முதல் 24.07.2022 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் கடைபிடிக்க மாநில குடும்ப நலத்துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டு மாவட்ட அளவில் பணியானது செவ்வனே செய்யப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உலக மக்கள்தொகை தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்பணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கி, பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மூலமாக மாவட்டம் முழுவதும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இலவச காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்வதற்காகவும்,தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களையும், பொதுமக்களிடையே மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை ஆட்சியர் கொடிசயைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, செறிவூட்டப்பட்ட உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற செய்முறை விளக்கங்களை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, செறிவூட்டப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் எம்.ஏ.இளங்கோவன், சுகாதாரத்துறை காசநோய்துணை இயக்குநர் லட்சுமிமுரளி,மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ம. ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் (பொ) கே.எஸ்.கௌரிசங்கர், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எஸ்.நாகராஜன், இந்திரா செவிலியர்; கல்லூரி முதல்வர் வச்சலா, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், இந்திரா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.