பதிவு:2022-07-12 15:29:42
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : உயர் கல்வி பயிலும் பொருட்டு 6 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.47.42 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 67 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 58 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 41 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 56 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 72 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனையடுத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பாக, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து பயிற்சி அளிப்பதற்காக வட்டார வள பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள ஒரு திருநங்கைக்கு நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதனையடுத்து மாவட்ட முன்னோடி வங்கி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியும், உயர்கல்வி பயிலும் பொருட்டு, ஒரு மாணவர் அமெரிக்கா சென்று எம்.எஸ். படிப்பதற்காக இந்தியன் வங்கி மூலமாக ரூ. 40 இலட்சம் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையையும், ஒரு மாணவி எம்.பி.ஏ., படிப்பதற்காக யூனியன் வங்கி மூலமாக ரூ. 1.26 இலட்சம் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையையும், ஒரு மாணவி பி.எஸ்.சி. நர்சிங் படிப்பதற்காக கனரா வங்கி மூலமாக ரூ. 1.62 இலட்சம் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையையும், ஒரு மாணவி பி.டெக் படிப்பதற்காக சென்ட்ரல் வங்கி மூலமாக ரூ. 3.64 இலட்சம் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையையும் மற்றும் ஒரு மாணவி பி.இ., படிப்பதற்காக கனரா வங்கி மூலமாக ரூ. 90 ஆயிரம் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையையும் என மொத்தம் 6 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.47.42 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்.சு.அசோகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எப்.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .ச.பாபு, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.