பதிவு:2022-07-12 15:34:42
திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியின் மெத்தனப் போக்கால் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் : பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை
திருவள்ளூர் ஜூலை 12 : திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ராஜா. இவரது மகள் ஹரிணிகா. 1 முதல் 10-ம் வகுப்பு வரை திருவாரூரில் உள்ள பள்ளியில் பயின்ற இவர் கடந்த ஆண்டு பிளஸ் 1 படிப்பை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து ஐஐடி பிரிவில் படித்து வந்துள்ளார்.பள்ளி விடுமுறைக்குப் பின் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி மாணவி ஹரிணிகாவை தந்தை ராஜா ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து பேசியுள்ளார்.
அப்போது தான் நன்றாக உள்ளதாகவும், உணவு மட்டும் பிடிக்கிவில்லை. இருந்தாலும் பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் ஜூன் மாதம் 25-ம் தேதி அந்த பள்ளியிலிருந்து ஹரிணிகாவின் தந்தை ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமலி என்பவர் மகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், மாத்திரை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்றும் அனுமதி கேட்ட போது அதற்கு சரி என்று சொன்ன மாணவியின் தந்தை ராஜா வெளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளியுங்கள். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நான்கைந்து முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் நிலை குறித்த தகவல்களை அளித்து வந்துள்ளனர். அதன்பிறகு காலை ஹரிணிகாவின் தந்தையை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், மாணவி உயிரிழந்ததாக தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அங்குள்ள மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாகவும், உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பள்ளி விடுதியில் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக மாறியதால் மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவோம், மருந்து மாத்திரை எதுவும் தராமல் மகளின் உடல் நிலை மோசமானதாக கிடைத்த தகவலையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததாகவும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
எனவே மகள் வயிற்று வலியால் துடித்த போது பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்காக இருந்ததால் உயிரிழந்ததாகவும், இது குறித்து கல்வி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில் விசாரணை நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவியின் தந்தை பி.ராஜா மற்றும் நாடார் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் கராத்தே ஏ.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகார் மனு அளித்தனர். பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற ஜூலை மாதம் 26-ந் தேதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.