பதிவு:2022-07-12 15:43:18
திருவள்ளூரில் குடிபோதையில் கத்தியைக்காட்டி கொலை முயற்சி : போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி கைது
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற இளைஞரை குடிபோதையில் கத்தியைக் காட்டி கொலை முயற்சி செய்த ரவுடியை கைது செய்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த செல்லக்கண்ணுவின் மகன் சதீஷ்ராஜன் (22) நேற்று காலை திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உழவர் சந்தை அருகே சொந்த வேலையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 இளைஞர்கள் கையில் மது பாட்டிலுடன் மது அருந்தியவாறு தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டும் வந்துள்ளனர். இதனைக் கண்ட சதீஷ் ராஜன், ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 நபர்களும் சதீஷ்ராஜனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன் பலமாக தாக்கிவிட்டு இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து சதீஷ்ராஜன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பத்தியால்பேட்டை, புங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மகன் தனுஷ் (18) என்பதும் ஏற்கனவே அவன் மீது இரு சக்கர வாகன திருட்டு, வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவனது கூட்டாளிகள் சதீஷ், சரவணன் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து புங்கத்தூரில் பதுங்கியிருந்த தனுஷை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீபபி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சதீஷ், சரவணன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.