பதிவு:2022-07-13 20:40:12
பள்ளிப்பட்டு அருகே இளைஞர்கள் மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் கல்லூரி ஊழியரை தாக்கி கொன்ற சம்பவம் : உறவுக்கார இளைஞன் கைது
திருவள்ளூர் ஜூலை 14 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி அருகில் வாலிபர்கள் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கல்லூரி உரிமையாளருக்கு கிடைத்த தகவலையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுப்பிரமணி சென்று பார்த்துள்ளார். அங்கு சுப்பிரமணியின் உறவுக்காரரான நவீன் என்ற இளைஞனும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்ததால் இளைஞர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போதையில் இருந்த இளைஞர்கள் சுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுப்பிரமணிக்கு பக்கவாதம் வந்ததால் அவருக்கு வலது கை, வலது கால் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை அறிந்த நவீன் என்ற உறவுக்கார இளைஞர் சுப்பிரமணியை கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சுப்பிரமணிக்கு தலை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள் சுப்பிரமணியை மீட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராக்கி மற்றும் காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகாரின் பேரில் மது போதையில் சுப்பிரமணியை அடித்து கீழே தள்ளி கொலை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணியின் உறவுக்காரன் நவீனை கைது செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் அவனை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் திருத்தணி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.