விவசாய நிலத்தில் பட்டா கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் : போலீசாருடன் வாக்குவாதம்

பதிவு:2022-07-13 20:56:56



திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலம் எடுத்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பட்டா கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் : போலீசாருடன் வாக்குவாதம்

 விவசாய நிலத்தில் பட்டா கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் : போலீசாருடன் வாக்குவாதம்

திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. பாக்கம் காலனியில் 40-க்கும் மேற்பட்டோர் வீடுகள் அகற்றப்பட்டது. அவ்வாறு வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கு அதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள நிலையில் மாற்று இடமாக பாக்கம் ஊராட்சியில் விவசாய நிலத்தை வழங்க அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய காலனிக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 6 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 18 பேருக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக தெரிகிறது. பெரிய காலனியைச் சேர்ந்தவர்கள் ஆடு மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதால் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் இதே பகுதியில் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுத்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் ஏற்கனவே விவசாய நிலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தியும், அவர்களுக்கு மாற்று இடத்தில் வழங்க வேண்டும் எனவும், புதிதாக வேறு யாருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டாம் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி் நேரத்திற்கும் மேலாக நீட்டித்த சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் விவசாய நிலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க கூடாது என்றும், மாற்று இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.