பதிவு:2022-07-15 15:18:38
தொடுகாடு கிராமத்தில் 200 இருளர் இன மக்கள் உட்பட 217 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 200 இருளர் இன மக்கள் உட்பட 217 பயனாளிகளுக்கு தலா ரூ.66,240 வீதம் ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.
தொடுகாடு கிராமத்தில் இருளர் இன மக்கள் பயனடையும் வகையில் இன்றைய தினம் ரூ. 1.44 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று, ஆவடியில் உள்ள நரிக்குறவ இன பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இல்லத்திற்கே நேரில் சென்று சாப்பிட்டு அப்பகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இதுபோன்ற பல்வேறு வகையிலான நலத்திட்ட உதவிகளை பலதரப்பட்ட மக்களுக்கும் சமமாக வழங்கி வருகிறார். அப்படிப்பட்ட முதல்வர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு கடந்த முறை எப்படி ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ, அதுபோன்று வருங்காலத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து உங்களுடைய எதிர்காலத்தில் தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். தற்பொழுது இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் இந்த பகுதிக்கு பெயர் சூட்டவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்த பகுதிக்கு “முத்துவேல் கலைஞர் ஸ்டாலின் நகர்” என்று பதிவு செய்து,எம்.கே.எஸ் நகர் என்று இன்று முதல் இந்த பகுதிக்கு இந்த பெயரை அழைக்க வேண்டும் என்றும் உங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மேலும், இப்பகுதியில் உள்ள வீட்டுமனைகளுக்கு கட்டிடம் கட்டித்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி,முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்ம ராவ், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகத்தின் செயலாளர் பலராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.