பதிவு:2022-07-15 15:35:27
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 4 கிலோ கட்டியை ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கல்லூரி முதல்வர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை :
திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியில்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படத் தொடங்கியதால் அனைத்து நோய்களுக்கும், அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சசிகலா (37). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளும் சுகப் பிரசவத்திலேயே பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக சசிகலாவுக்கு உடல் உபாதைகள் அதிகளவில் ஏற்பட்டு, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்துள்ளார். இந்லநிலையில் கடந்த வாரத்தில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு பல்வேறு விதமான பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் மூலம் தீவிர பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் ஃபைப்ராய்டு எனப்படும் பெரிய கட்டி இருப்பது உறுதியானது. அதனையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் தலைமையிலான மருத்துவக் குழுவில் டாக்டர் ரேவதி, டாக்டர் சூர்யபிரபாவதி ஆகியோர் பங்கேற்று இன்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். இந்த அறுவை சிகிச்சையின் போது இரத்தம் வீணாகாமல் உயிருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் நல்ல முறையில் சசிகலாவின் வயிற்றிலிருந்து 4 கிலோ ஃபைப்ராய்டு பெரிய கட்டியை மருத்துவக் குழுவினர் அகற்றி சாதனை படைத்துள்ளனர். கடந்த காலங்களில் சிறு சிறு பிரச்சினைகளுக்கே சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வந்த நிலையில் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட தொடங்கியதால் அனைத்து விதமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சையின் போது அனஸ்தீசியா முதன்மை மருத்துவர் பத்மினி, மருத்துவர்கள் சுசித்ரா, ஜெயபாரதி மற்றும் கௌரி ஆகியோர் இடம் பெற்று சிறப்புற பங்கேற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.