திருவள்ளூரில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா ஊக்குவிப்பு தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

பதிவு:2022-07-17 17:12:02



திருவள்ளூரில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா ஊக்குவிப்பு தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

திருவள்ளூரில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா ஊக்குவிப்பு தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் ஜூலை 16 : திருவள்ளூர் நகராட்சி உழவர் சந்தை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவிட்-19 ஊக்குவிப்பு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்பொழுது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1049. நேற்று மட்டும் 175 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.

நம் மாவட்டத்தை பொறுத்தவரை 95 சதவிகிதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 81 சதவிகிதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மூன்றாவது தவணை அதாவது பூஸ்டர் தவணை தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இலவசமாகவும், 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்திதான் இந்த பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்பொழுது அரசு அறிவிப்பின்படி, சிறப்பு இயக்கமாக இன்றிலிருந்து 75 நாட்களுக்கு அரசு தடுப்பூசி முகாம்களில் 18 வயது முதல் 60 வயது வரை இருக்கக்கூடிய தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் கணக்கெடுப்பின் அடிப்படையில் 10 இலட்சம் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதில், 1.50 இலட்சம் நபர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். மீதமுள்ள 8.50 இலட்சம் மக்கள் 60 வயதிற்கு கீழுள்ளவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே, அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், குறுஞ்செய்தி பெறப்படாதவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவரா என்பதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை நடைபெறும் முகாம்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் காண்பித்து தெரிந்துகொள்ளலாம். இன்றிலிருந்து நமது மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த வாரம் சனிக்கிழமை 18 வயது முதல் 59 வயதிற்குள்ளானவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட பயிற்சி குழு மருத்துவர் தீபலட்சுமி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவிஸ்ரீ, திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், வட்டார மருத்துவ அலுவலர் (வெள்ளியூர்) சரவணகுமார், மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.