பதிவு:2022-07-20 09:38:36
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 74 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 57 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 45 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 66 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 70 மனுக்களும் என மொத்தம் 312 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 24 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக 15 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் குழித்தட்டு நாற்றுகள் மற்றும் காய்கறி விதைகளையும், பாம்பு கடித்து உயிரிழந்த மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் ஓரு இலட்சம் வீதம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,580 வீதம் ரூ.55,800 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 3 முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூ.4,95,000 கடன் பெற்ற 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,58,331 மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ஜி.ராஜேஷ்;வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.