கனகம்மாசத்திரத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

பதிவு:2022-07-20 14:50:49



கனகம்மாசத்திரத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் : ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

கனகம்மாசத்திரத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 30.07.2022 வரை நடைபெற உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் .ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, ஆலோசனைகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். (உப்பு சர்க்கரை கரைசல்) மற்றும் ஜிங்க் மாத்திரைகளை குழந்தைகளுக்கு வழங்கி தெரிவித்தாவது :

தீவிரமான வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் திட்டம் நம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறோம். குழந்தைகளுக்கிடையே இருக்கின்ற ஊட்டச்சத்து குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்யும்போது முக்கியமான ஒரு காரணம் அது வயிற்றுப்போக்கு என்று தெரிய வருகிறது. அப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கிடையில் வயிற்றுப்போக்கை குறைக்கவும், வயிற்றுப்போக்கினால் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு பிரச்சனைகளை தடுப்பதற்காகத்தான் இன்றைக்கு இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை பொறுத்தவரை ஒ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் மற்றும் துத்தநாக மாத்திரைகளும் நம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுடைய வீடுகளிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம்.இந்த திட்டத்தை பொறுத்தவரை நம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமல்ல, அங்கன்வாடி பணியாளர்களும் சேர்ந்து ஆக மொத்தமாக சுமார் 3,000 பணியாளர்கள் இந்த திட்டத்தில் பங்குபெறவுள்ளனர்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை நம் மாவட்டத்தில் சுமார் 2,40,000 குழந்தைகள் 5 வயதிற்கு கீழ் உள்ளனர் என்பது ஓர் உத்தேச கணக்கு. 5 வயதிற்கு கீழ் உள்ள இந்த 2,40,000 குழந்தைகள் கொண்ட வீடுகளிலும் ஒவ்வொரு 2 பாக்கெட் ஓ.ஆர்.எஸ். அதுமட்டுமல்லாமல் ஜிங்க் மாத்திரைகள் இந்த இரண்டும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம். இந்த ஜிங்க் மாத்திரை பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை என்ற முறையில் 14 நாட்களுக்கு சாப்பிட வேண்டும். 6 மாதத்திற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 6 மாதத்திற்கு மேல 6 மாதத்திலிருந்து 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு 14 நாட்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம்.இந்த திட்டம் அடுத்த 15 நாட்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 30.07.2022 வரை நடைபெற உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமில் ஓ.ஆர்.எஸ். (உப்பு சர்க்கரை கரைசல்) மற்றும் ஜிங்க் மாத்திரைகளின் பயன்பாடு மற்றும் அப்பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் பெற்றோர்களுக்கு வழங்கினார்.

முகாமில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) எம்.ஏ.இளங்கோவன், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கு.ரா.ஜவஹர்லால், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவிஸ்ரீ, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட பயிற்சி மருத்துவர் தீபலட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.