பதிவு:2022-07-20 14:53:09
மாதவரத்தில் ஆய்வகம் மற்றும் கால்நடை பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆய்வு
திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கால்நடை பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் ஆய்வகம் மற்றும் கால்நடைகளை தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின் போது கால்நடை பண்ணை வளாகத்தில் கறவை மாடுகள் பிரிவு, பன்றி பிரிவு, ஆட்டுப்பிரிவு, நாட்டின நாய் பிரிவு, முயல் பிரிவு மற்றும் தீவனப்பண்ணை ஆகியவற்றைப் பார்வையிட்டார். மேலும், கால்நடை பண்ணை வளாகத்தில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி மாணவர்கள் மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களை சந்தித்து பண்ணையில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி சம்மந்தப்பட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும். பண்ணையில் செயல்பட்டுவரும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவி மையமாக்கல் மையத்தைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு செயல்படுகளைப் பற்றி விரிவாக கேட்டறிந்தார். பின்னர் பண்ணையில் பணிபுரியும் பேராசிரியர்களிடம் பண்ணையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்,மேலும் அமைச்சர் தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நிதியில் ஏற்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடு சார் பரிமாற்ற தளம் மற்றும் தமிழக அரசின் நிதியினால் ஏற்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை உயிர் பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடு சார் பரிமாற்ற தளம் ஆய்வகம் இந்தியாவிலேயே முதல்முறையாக கால்நடை மருத்துவ ஆய்வுகளை களப் பயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களாய் மாற்றம் செய்ய உருவாக்கப்பட்டது என்பதை வல்லுநர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வகம் 2012ம் ஆண்டு முதல் 3 நிலைகளாக செயல்பட்டு வருவதையும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட 11 வகை கால்நடை மருந்துபொருட்களை தயாரித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அளித்து வருவதோடு பல்வேறு வகையான நோய்கண்டறிதல் பரிசோதனைகளையும் தமிழக அரசின்கால் நடை பராமரிப்புத்துறைக்கு அளித்துவருகிறது என்பதையும் கேட்டறிந்தார்.
இது தவிர இந்த ஆய்வகம் பலதரப்பட்ட கால்நடை நோய்த்தடுப்பூசி, மருந்துகள் மற்றும் ஏனைய நவீன தொழில் நுட்பங்களையும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நிதி மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கி வருகிறது என்பதையும் கேட்டறிந்தார். மூன்றாம் நிலை உயிர்பாதுகாப்பு ஆய்வகத்தில் அதிக பாதிப்புகள் உண்டாக்கும் கிருமிகளான கோமாரிநோய், பறவை மற்றும் பன்றிகாய்ச்சல், வெறிநோய், அடைப்பான், கன்று வீச்சு நோய், காசநோய் மற்றும் மாடுகளில் பெரியம்மை மற்றும் விலங்குகளில் கரோனா ஆகிய நோய்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய முயற்சி மற்றும் ஆதரவினால், இந்த ஆய்வகம் மத்திய அரசின் உயிர்தொழில் நுட்பவியல் துறையின் வல்லுநர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்றதென தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இத்துடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட வருவாய் நோக்கமில்லாத "தானுவாஸின் கால்நடை அறிவியல் தொடக்கநிலை நிலை தொழில் உருவாக்க அமைப்பு" (வி.ஐ.எப்) என்ற நிறுவனத்தையும் பார்வையிட்டார்.இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.