பதிவு:2022-07-20 14:55:14
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடமிருந்து 7 சவரன் தங்க தாலி பறித்துக் கொண்டு ஓட்டம் : ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கைவரிசை
திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பஜார் வீதியைச் சேர்ந்தவர் ஜெகன் மோகன். விவசாயியான இவரது மனைவி சலுஜா (எ) சைலஜா (42). இவர்களது மகன் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லூரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் வழக்கம் போல் மகனை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக சைலஜா இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருப்பாச்சூர் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் சைலஜா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலியை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சைலஜா செய்வதறியாது தவித்தார். அந்த பைபாஸ் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து சைலஜா திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் சைலஜா கொடுத்த புகாரின் பேரில் ஹெல்மெட் அணிந்து வந்த 7 சவரன் தங்க தாலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை,வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.