சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் ஷட்டர்கள் மற்றும் ஏரியை 2 அடி உயரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

பதிவு:2022-07-21 21:56:28



சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் ஷட்டர்கள் மற்றும் ஏரியை 2 அடி உயரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் ஷட்டர்கள் மற்றும் ஏரியை 2 அடி உயரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் ஜூலை 21 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். கடந்த 1940 முதல் 1944ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ஆனது 8458 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. 35 அடி உயரமும் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ஆர். ஆகியோர் கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 0 பாயிண்ட் வரை 152 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு. அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது. . குடி நீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின் படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது.

இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வரை 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது கடந்த 2015 இல் ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிகளவில் பெய்ததால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அதனால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி இந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் உயர்த்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற் பொறயாளர் கோபால கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள்களை ஆய்வு செய்தனர். மேலும் ஏரி ஏற்கனவே 35 அடி உயரம் உள்ளதை மேலும் இரண்டடி உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இதேபோல் இரண்டு அடி உயர்த்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா எனவும். பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை உயர்த்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. ஏரியின் நீர் மட்டத்தை உயர்த்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து தண்ணீர் திறக்கும் மதகுகள் மேலேறி ஆய்வு செய்தனர் ஆய்வைத் தொடர்ந்து பொதுப்பணித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அதைத்தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை அறிக்கை முழுவதும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு பூண்டி ஏரியை 2 அடி உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகள் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியில் சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் நீரியல் மற்றும் நீர்நிலை ஆய்வகங்களுக்கு நீர் கொண்டு செல்லும் மூன்று கிணறுகள் மதகுகள் புதிதாக கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பூண்டி ஏரியின் உறுதித்தன்மை , மதகுகளின் உறுதி உள்ளிட்டவைகளை நீர் மூழ்கி கப்பல் மூலம் பொறியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்