பதிவு:2022-07-23 13:04:23
மெய்யூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக 168 பயனாளிகளுக்கு 81 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் பல்வகை கடன் : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெய்யூர் பகுதியில் ஜே ஜே 601 மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக பல்வகை கடன் வழங்கும் விழா நடைபெற்றது. திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர், மெய்யூர் திமுக ஊராட்சி செயலாளர் சக்கரவர்த்தி ரெட்டியார், மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி ஏழுமலை, திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, திருவள்ளூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அ.காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக 7 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 94 பேருக்கு 31 லட்சத்தி 77 ஆயிரமும், மாற்று திறனாளிகளுக்கான கடன் அறிவாயுதம் நாளிதழ் திருவள்ளூர் மாவட்ட நிருபர் இரா.பிரபு உட்பட 4 பேருக்கு ரூ.1 லட்சமும், சிறு வணிக கடனாக 11 பேருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரமும், விவசாய கடனாக 49 பேருக்கு ரூபாய் 46 லட்சத்து 97 ஆயிரம் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு 80 லட்சத்தி 84 ஆயிரம் மற்றும் பாலவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக இருளர் இன மக்களுக்கு சிறு வணிக கடனாக 10 பேருக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் மெய்யூர் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி அவர்களின் குடும்பத்தின் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிக்கு 12 மின்விசிறிகள் மற்றும் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் யூனிட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தில்லைகுமார்,இராஜாபாளையம் வார்டு உறுப்பினர்கள் கே.ரகுபதி,ஆர்.சி.ரமேஷ்,பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஊத்துக்கோட்டை பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே ஜே 601 மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியரும் கூட்டுறவு சார் பதிவாளருமான எம்.எஸ்.விஜய் சரவணன், செயலாளர் கே.ஏழுமலை ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.