பதிவு:2022-07-24 18:32:36
திருவள்ளூர் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டம் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு அய்யனார் அவென்யூ பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் எலைட் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகர் மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் எலைட் தலைவர் பாலாஜி, செயலாளர் ராகவேந்திரன் மற்றும் பொருளாளர் ராகுல் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை எவ்வாறு தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குப்பைகளை வீட்டருகில் கொட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும் மக்கும் குப்பை மக்காத குப்பையை வழங்கும் போது சுற்றுப்புற பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், 16-வது வார்டு உறுப்பினர் இந்திரா பரசுராமன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ, தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளும் நடப்பட்டது.