பதிவு:2022-07-24 18:40:19
44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி : திருவள்ளூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் செஸ் போட்டி: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் செஸ் போட்டி: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளில் 188 நாடுகள் பங்கு பெறுகிறது. இப்போட்டிகளில் சுமார் 2,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான துவக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செஸ் போட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செஸ் விளையாட்டு போட்டிகள், மராத்தான், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வருகிற 26.07.2022 அன்று கோயம்புத்தூரிலிருந்து வரப்பெறும் செஸ் ஒலிம்பிக் ஜோதியினை பெற்றுக்கொள்ளப்பட்டு, இருசக்கர வாகன பேரணி மூலம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடையும் மாதிரி ஒலிம்பிக் தீபம் இருசக்கர வாகன பேரணி பால்வளத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 26.07.2022 அன்றைய தினம் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி நடைபெறும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் மனித செஸ் விளையாட்டு போட்டி, மருத்துவ கல்லூரி வளாகத்தில் “நம்ம ஊரு நம்ம செஸ்” என்ற செல்ஃபி எடுக்கும் இடத்தினை திறந்து வைத்தல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு செஸ் போர்டு வழங்குதல். மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நேரு யுவகேந்திரா வழங்கும் பரத நாட்டியம், பறை, சிலம்பம், குழு நடனமும், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் 3-டி இமேஜ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள செஸ் நுழைவு சின்ன வாகனத்தை தொடங்கி வைத்தல், மாணவ, மாணவியர்களுக்கு செஸ் லோகோ அச்சிடப்பட்ட டி-சர்ட் மற்றும் கேப் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற “மிதக்கும் செஸ்” போட்டியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ், நீச்சல் பயிற்றுநர் லோகேஷ் குமார், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.