பதிவு:2022-07-26 15:24:04
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை : திருவள்ளூர் கலெக்டர் காஞ்சி சரக டிஐஜி, எஸ்பி., நேரில் விசாரணை : மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும்- கலெக்டர் பேட்டி : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். கூலித் தொழிலாளியான இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா.(17). இவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள அரசினர் உதவி பெறும் பள்ளியான சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த விடுதியில் 85 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காலை வகுப்புக்கு சக மாணவிகள் விடுதியில் இருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். அப்போது சக மாணவிகளுடன் கிளம்பிய சரளா திடீரென மீண்டும் விடுதிக்கே சென்றுள்ளார்.
சரளா வகுப்புக்கு வராததால் சக மாணவிகளில் ஒருவர் சென்று பார்த்த போது விடுதி கழிவறையில் மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் அரசினர் உதவி பெறும் சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு டிஎஸ்பி சந்திரதாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேரில் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை யாரும் விடுதிக்குள் அனுமதிக்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் தற்கொலை விவகாரம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும், அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் விடுதியில் குவியத் தொடங்கினர். இதனையடுத்து திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர், ஏ.செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் எஸ் பி பெகர்லா செபாஸ் கல்யாண் விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது சம்மந்தமாக விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகளிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், பெற்றோர்கள் புகார் கொடுத்ததும், நீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கீழச்சேரிக்கு வந்த காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், பெற்றோரிடமும் விசாரணை நடத்தியதும் அவர்கள் தரும் புகாரையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து அவர்கள் விசாரணையை தொடர்வார்கள் என்றும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் அதே பள்ளியில் தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மேலும் சில மாணவிகள் பயில்வதால் அந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்களும் விசாரிக்க வருகை தந்ததால் மேலும் பரபரப்பாக காணப்பட்டது.
மாணவியின் பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கும் பட்சத்தில் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என டிஐஜி சத்யபிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாணவியின் மரணம் குறித்து காவல் துறை சார்பில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இருப்பினும், மாணவியின் மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொள்ள இருப்பதாகவும், அவர்கள் படிப்படியாக விசாரணையை தொடர்வார்கள் என்றும் தெரிவித்தார்.
மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடனே வாங்க போவதில்லை என பெற்றோர் தெரிவித்திருப்பதால் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து மாணவியின் பெற்றரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மாணவி சரளாவின் பெற்றோர் கூறுகையில், நேற்று இரவு மகள் தொலைபேசயில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது விடுதி ஆண்டுவிழாவிற்காக 500 ரூபாய் செலவுக்கு வேண்டும் என கேட்டதாகவும்தெரிவித்துள்ளனர். தந்தை எங்கே இருக்கிறார் என விசாரித்ததாகவும், அவர் உடல் நலம் சரியில்லாமல் திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதை சொல்லவில்லை என்றும், சாதம், பருப்பு ரசம் ஆகியவற்றை இரவு சாப்பிட்டதாகவும் மகள் தெரிவித்ததாக கூறினர். மேலும் காலையில் நடந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் எதுவும் சொல்லாமல், வீட்டிற்கு காவல் துறையினர் வந்து தெரிவித்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதகாவும் தெரிவித்தனர்.
மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், இன்று காலை சக மாணவிகள் 4 பேருக்கு தலை முடி வாரி விட்டு நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்ததாகவும், எந்த பிரச்சினையும் எங்களுக்குள்ளும், வார்டன் தரப்பிலும் இல்லை என்றே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கீழச்சேரியல் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதையடுத்து மாணவியின் பெற்றோர் சிபிசிஐடி போலிசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் விடுதி வார்டன்,, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்டிஎஸ்பி செல்வகுமார், இன்ஸ் திரிபுரசுந்தரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவித்தனர்.
தெக்களூர் மாணவியின் மர்ம மரணம் குறித்து உரிய பதிலை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவி சரளாவின் உறவினர்கள் மற்றும் தெக்கலூர் கிராம மக்கள் பள்ளிப்பட்டு- பொதட்டூர்பே்டை சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா சமரச பேச்சு வார்த்தியில் ஈடுபட்டார். அப்போது அதே கீழச்சேரி பள்ளியில் பயிலும் மற்ற மாணவிகளின் பெற்றோர், உறவினர்களை அரசுப் பேருந்தில் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பள்ளியின் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க தெக்கலூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தெக்கலூரில் இருந்து கீழச்சேரி செல்வதற்காக சாலை மறியலில் ஈடுபட்ட தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பேரணியாக புறப்பட்டனர். இதனையடுத்து திருத்தணி காவல் துறையினர் பேரணியாக சென்ற பொது மக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய சரளாவின் உடல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மாணவியின் பெற்றோரிடம் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சு வார்த்தையை அடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். விடியோ காமராவில் அந்த பிரேதப் பரிசோதனைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் டீன் தலைமையில் மாணவி சரளாவின் பெயர பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
மருத்துவமனை வளாகம் அருகே அசம்பாவிதங்களை தவிர்க்க 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆயுதப்படை ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி சத்யபிரியா, எஸ் பி பெகர்லா செபாஸ் கல்யாண் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனை அருகே ஆயுதப்படை ஐஜி கண்ணன், மண்டல ஐஜி தேன்மொழி காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி சத்திய பிரியா தலைமையில் திருவள்ளூர் எஸ் பி கல்யாண், திருவண்ணாமலை எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் அனைவருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணீர் புகை மூட்ட வாகனம் (வஜ்ரா). திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரசி ஸ்ரீ வத்சன் தலைமையில் மருத்துவர்கள் நாராயண பிரபு, பிரபு, வைர மாலா ஆகிய மருத்துவர்கள் சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் முன்னிலையில் முழு வீடியோ பதிவு காட்சிகளுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பிரேதப் பரிசோதனை செய்வதால் உடலை வாங்க போவதில்லை என்றும்,முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்த நிர்வாகம் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனே வாங்க போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவி உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தற்போது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.பிறகு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊரான திருத்தணி அருகே தெக்கலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும் இறந்த சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.