பதிவு:2022-07-28 09:29:28
வெள்ளவேடு அருகே கோளப்பன்சேரி ஏரியில் குளிக்க சென்ற பிளஸ் 2 முடித்த 3 பேரில் 2 பேர் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் சஜீவன். (17). அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலுவின் மகன் அருள் (17). ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணனின் மகன் பிரவீன் வெங்கடேசன்(17). நண்பர்களான 3 பேரும் பிளஸ் 2 படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே ஏரியில் 3 பேரும் குளிக்க வந்துள்ளனர்.ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது சஜீவன் மற்றும் அருள் ஆகிய இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் வெங்கடேசன் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையிருக்கும் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்கள் உடலைத்தேடும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் மீட்டனர்.மீட்கப்பட்ட இருவரின் உடலையும் வெள்ளவேடு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோலப்பஞ்சேரி ஏரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.