பதிவு:2022-07-29 22:57:56
கீழச்சேரி பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை : தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு பள்ளி நிர்வாகி, வார்டன், தலைமை ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை : குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது - ஆணைய தலைவர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா கடந்த 25-ந் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் மாணவியின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்யக் கூடாது என்ற நீதிமன்ற ஆணையை ஏற்று டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி போலீசுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.
இதனையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து பள்ளி மாணவி சரளாவின் மரணம் குறித்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் கீழச்சேரியில் உள்ள விடுதியில் நேற்று காலை பள்ளி நிர்வாகி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் வார்டன் சக மாணவிகளிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானுங்கோ தலைமையில் 7 நபர்கள் கொண்ட குழுவினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி சரளாவின் தாயார் முருகம்மாள் அண்ணன் சரவணன் அண்ணி மீனா, சித்தி குட்டியம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர், மாணவியின் மரணம் குறித்து புகாரின் பேரில் பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள், விடுதி வார்டன், மற்றும் சரளாவின் நெருங்கிய பள்ளி தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டோம். இது சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை செய்த மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஆகியோரிடமும் மாணவியின் மரணம் சம்பந்தமான தகவல்களை சேகரித்துள்ளோம்.
மாணவியின் உறவினர்களிடமும் மரணம் சம்பந்தமான சந்தேகங்களையும் கேட்டறிந்தோம். விடுதியில் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளதாக ஆணைய தலைவர் பிரியங் காணுங்கோ செய்தியாளர்களிடம் தெரிவத்தார். இறுதியாக சிபிசிஐடி போலீசார் தரும் அறிக்கையுடன் சேர்த்து மாணவியின் மரணம் குறித்த முழு அறிக்கையும் விரைவில் மத்திய, மாநில அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது மாணவி சரளா மரணத்தில் விடுதி காப்பாளராக உள்ள ஷெரினா என்பவர் மீது சந்தேகமாக உள்ளது. அவரின் கெடுபிடியால் இந்த முடிவை சரளா எடுத்தாரா என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் விடுதி சார்பில் மகள் இறப்பு குறித்து உண்மையான தகவலை, உரிய நேரத்தில் தராமல், தகவல் தருவதில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினர்