பதிவு:2022-07-31 15:07:39
திருவள்ளூரில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மத்திய மின்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு முகமை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, விழா பேருரையாற்றினார்.
மின்சாரத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் நம்முடைய வாழ்க்கையை பெரிய அளவில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்பதற்காக மக்களுடைய வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் இந்திய அரசும், தமிழக அரசம் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை துரித மின் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த மின் வளர்ச்சி திட்டம் மற்றும் தீன்தயான் உபத்யாயா திட்டங்களின் கீழ் ரூ.23 கோடி செலவில் புதிய துணை மின் நிலையங்கள், துணை மின் நிலைய மின்மாற்றகள் தரம் உயர்த்துதல் புதிய மின் பாதைகள் அமைத்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
சீரமைக்கப்பட்ட சீர்திருத்தங்கள் அடிப்படையிலான மற்றும் முடிவுகள் இணைக்கப்பட்ட விநியோக திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கரை, ஏனம்பாக்கம் மற்றும் வெங்கல் கிராமங்களில் புதிய 33 கி.வ. துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. தமிழக அரசு மற்றும் மின்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பாப்பரம்பாக்கம் மற்றும் குஞ்சலம் துணை மின் நிலையங்கள் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் இயக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.125 கோடி செலவில் கனகவல்லிபுரம் கிராமத்தில் புதிய 230 கி.வ. துணை மின் நிலையம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படவுள்ளது. திருவாலங்காடு மற்றும் கீழானூர் கிராமங்களில் ரூ.59 கோடி செலவில் இரண்டு புதிய 110 கி.வ.துணை மின் நிலையங்கள் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.
எதிர்வரும் பருவமழையினை கருத்தில் கொண்டு சீரான மின் விநியோகம் மேற்கொண்டிட 4,952 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 574 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 2,404 இன்சுலேட்டர்கள் பாலிமர் இன்சுலேட்டர்களாக மாற்றப்பட்டுள்ளன. 78 கி.வ. பழுதடைந்த மின்பாதைகள் புதிய மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. 56 புதிய மின் மாற்றிகள் குறைந்;த மின் அழுத்த குறைபாட்டினை கலைய நிறுவப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மின்சாரத்துறை சார்பாக நிறைய ஊழியர்கள் இங்கு வந்துள்ளீர்கள். மின்சாரத்துறை என்பது மக்களிடம் பெரிய அளவில் தொடர்பு இருக்கக்கூடிய ஒரு துறையாகும். ஒரு புகார் வந்தால் ஒரு சில மணி நேரங்களில் அந்த புகாருக்கு தீர்வு காணும்படி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம பெருவிழாவில் மின்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து இராஜீவ்காந்தி தேசிய ஆராய்ச்சி கழக நிறுவனத்தின் மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அம்மாணவ, மாணவியர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
விழாவில் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.ஜி.பிரசாத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், திருவள்ளூர் மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் கனகராஜ், மத்திய மின்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு முகமை மாவட்ட செயல் அலுவலர் ஆண்டாள்,உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.