பதிவு:2022-07-31 15:13:04
திருவள்ளூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கோரப்பட்டது :
திருவள்ளூர் ஜூலை 31.: திருவள்ளூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர் மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் கொண்டு வந்த மன்றப் பொருளில், திருவள்ளூர் நகரில் உள்ள பொது மக்கள் வெளியூர் செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் நின்று செல்லாத காரணத்தால் சென்னை அலல்வது அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு சென்று விரைவு ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் சென்னைக்கோ அல்லது அரக்கோணத்திற்கோ விரைவு ரயிலை பிடிக்க சாதாரண ரயிலில் செல்லும் போது, வழியில் சிக்னல் கோளாறு காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், லால்பாக் எகாஸ்பிரஸ் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நீலகிரி எக்ஸ்பிரஸ் மங்களூர் எக்ஸ்பிரஸ் கச்செகுடா எக்ஸ்பிரஸ் போன்ற விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மன்றத்தின் முடிவிற்கு வைக்கப்பட்டது.
அதே போல் 11-வது வார்டு உறுப்பினர் வி.இ.ஜான் பேசும் போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனம் 13 வார்டுகளில் மட்டுமே உள்ளது. 11வது வார்டில் ஆயிரம் குடியிருப்புகள், ஹோட்டல், கடைகள், விடுதிகள் என உள்ள நிலையில் குப்பை வாகனத்தை தனிநபர் இழுத்துச் செல்லும் நிலைமை உள்ளது. இதனால் 11-வது வார்டு மட்டுமல்லாது அனைத்து வார்டுகளிலும தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அதே போல் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை சென்று வந்த ட்டி1 என்ற அரசுப் பேருந்து தற்போது நிறுத்தம் செய்யப்பட்டதால், திருவள்ளூர் நகர்ப் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செல்லக் கூடியமாணவர்கள் ஆட்டோ அல்லது தனியார் பேருந்தில் சென்று வரக்கூடிய நிலை உள்ளது. மேலும் ஆட்டோக்கள் அதிகமாகி போக்குவரத்திற்கும் இடையூறாகவும், பொது மக்கள் கூடுதல் பணம் செலுத்தி பயணிக்கவேண்டிய நிலை உள்ளதால் மீண்டும் மீண்டும் ட்டி1 என்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், அதற்காக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதே போல் 10 வது வார்டு உறுப்பினர் டி.கே.பாபு பேசும் போது, திருவள்ளூர் நகரின் நுழைவு வாயிலாக இருக்கும் 10-வது வார்டு பகுதியில் உள்ள பழைய ஆவடி சாலையில் காக்களூர் ஊராட்சியையும், திருவள்ளூர் நகராட்சியையும் இணைக்கும் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மிகப் பெரிய நுழைவு வாயில் அமைத்து தந்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
23-வது வார்டு உறுப்பினர் சி.ஆனந்தி சந்திரசேகர் பேசும் போது, பழைய மேட்டுத் தெரு, புதிய மேட்டுத் தெரு,கலைஞர் நகர், காமராஜபுரம், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைத்து பல வருடங்களுக்கு மேலாகி அவை அனைத்தும் மிகவும் சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் புதிய மழை நீர் வடிகால்வாய்களை கட்டித்தரும்படி கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.