பதிவு:2022-07-31 15:16:48
திருத்தணி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் செத்து மிதந்து வரும் மீன்களால் துர்நாற்றம் : சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிநகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணேரி என்ற ஏரி உள்ளது. நகர மகக்ளின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் அந்த ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து நகர மக்களுக்கு பைப் லைன் மூலம் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றது. இதனால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றும் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும் ஏரியில் இறந்த மீன்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நகராட்சி மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் அண்ணேரி என்ற ஏரியில் கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் குடிநீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள் முதல் முதியவர் வரை தோல் வியாதி, உட்பட பல்வேறு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், நகராட்சி நிர்வாகம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி நகர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.