பதிவு:2022-08-08 20:16:39
திருவள்ளூர் அருகே தவணை முறையில் சுற்றுலா வாகனம் வாங்கியவரை பைனான்ஸ் நிறுவனத்தின் அடியாட்கள் தாக்குதல் : ரூ.20 ஆயிரம் பறித்துக் கொண்டு ஓட்டம் :
திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். (50). இவர் சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜே.மோட்டார்ஸ் பைனான்ஸ் ல் அதன் உரிமையாளர் பாரஸ் என்பவரிடம் தவணை முறையி்ல் சுற்றுலா வாகனத்தை வாங்கியுள்ளார்.
இந்நிலையில்கடந்த 27-ந் தேதி இரவு தர்மன் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் என்ற பகுதியில் வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருடன் வந்த 6 நபர்கள் வண்டியை நிறுத்தி பைனான்ஸ் உரிமையாளர் பாரஸ் உன் வண்டியை வாங்கி வரச் சொன்னதாக கூறியுள்ளனர்.
தர்மன் சுற்றுலா வாகனத்தை தர மறுத்த நிலையில் கார்த்திக்குடன் வந்த மற்றொரு நபர் தர்மன் பாக்கெட்டில் வைத்திருந்த 20 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்துக் கொண்டார். அதனையடுத்து கராத்திக் உருட்டுக்கட்டையால் தர்மன் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதால் அலறியபடி தர்மன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வருவதைக் கண்ட கார்த்திக் உள்ளிட்ட 7 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து தர்மனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தர்மன், இந்த தாக்குதல் குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஜே.மோட்டார்ஸ் பைனான்ஸ் உரிமையாளர் பாரஸ், வெள்ளவேடு கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.