பதிவு:2022-08-09 22:33:43
திருத்தணி நகராட்சியில் ரூ. 12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஆக 09 : திருத்தணி நகராட்சியில் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து பேசினார்.
இந்த ஆண்டு 33 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கிறோம். இந்த ஆண்டு ரூ. 1000 கோடி மதிப்புள்ள திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தந்துள்ளார். நமக்கு நாமே கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 400 கோடி தந்துள்ளார்கள். அனைத்து பணிகளையும் ஒவ்வொரு பேரூராட்சியில் இருக்கின்ற அனைத்து இடங்களிலும் இந்த அடிப்படை வசதிகளை செய்வதற்காக தேவையான பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
அனைத்து பகுதிகளிலும், நகர்ப்புற வளர்ச்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்கள். அதற்கான முழுமையான திட்ட அறிக்கை விரிவான முறையில் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. குப்பை சேர்ந்துள்ள பகுதிகளில் அந்த குப்பைகளை அகற்றுவதற்குரிய நவீன திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அனைத்து நகரங்களிலும், விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் சாக்கடை நீர் கலக்காத வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்தப்படும் பணி தொடர்ந்து நடைபெறும். ஓரிரு வருடங்களில் அந்த பணிகள் முழுமையாக முடிவடையும் வகையிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கூறினார்.
இதில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்),ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),ச.சந்திரன் (திருத்தணி), முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, திருத்தணி நகராட்சி ஆணையர் சி.ராமஜெயம், திருத்தணி நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.