பதிவு:2022-08-12 10:40:41
திருவள்ளூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் மூவர்ணக் கொடி தனியார் கல்விக்குழுமம் சார்பில் விழிப்புணர்வு பேரணி :
திருவள்ளூர் ஆக 11 : 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம் தோறு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசின் அறிவித்தது. அதனையடுத்து நேற்று திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள விஸ்வக்சேனா (தனியார்) கல்விக்குழுமம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கல்விக்குழும தலைவர் சி.பி.முகுந்தன் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் என்.லீலா ஆகியோர் முன்னிலையில் பேரணியை திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி ஜே என் சாலை வழியாக ஆயில் மில் அம்பேத்கார் சிலை அருகே நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பகத்சிங், காந்தி, நேரு, மற்றும் ஜான்சிராணி ஆகியோர் வேடமணிந்தும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பேரணியின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களின் தியாகங்கள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மற்றும் திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் எம்.பூர்ணிமா, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ந.நாகேஸ்வரி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலூர்பவா வின்னரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.