பதிவு:2022-03-30 08:08:44
திருவள்ளூர் அருகே ரூ.8.25 கோடி மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி கை குழந்தையுடன் எஸ்.பியிடம் பெண் புகார் :
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் அடுத்த மாலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜே.பி ஸ்டோர் என்ற ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அப்போது மளிகை கடைக்கு எத்தனை கோடிக்கு வேண்டுமானாலும் மளிகைப் பொருட்கள் தருவதாக சத்தியமூர்த்தி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி கடந்த இரண்டு ஆண்டுகளாக பண பரிவர்த்தனை செய்து வந்த அடிப்படையில் ரூ.8.25 கோடி ரூபாயை ஜோதி கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி மளிகைப் பொருட்கள் தராமலும் , பணத்தையும் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவரை தாக்கியும், கழுத்தில் அணிந்திருந்த 20 சவரன் நகையை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோதியின் மனைவி சரண்யா ஆவடி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று தனது ஒன்பது மாத கைக்குழந்தையுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன், வந்து புகார் அளித்தார். வியாபாரத்தில் உதவி செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது குறித்து கேட்டபோது அடியாட்களுடன் வந்து சரமாரியாக தாக்கி 20 சவரன் நகையை பறித்துக் கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் ஜோதி மனைவி சரண்யா தெரிவித்தார். இதனால் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சத்தியமூர்த்தி என்பவர் மீது ஏற்கனவே அதிகத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் வழக்கறிஞருமான வேலாயுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.