பதிவு:2022-08-12 13:09:11
ஆவடியில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் உறுதிமொழி :
திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, அறிவுரைகளை வழங்கி பேசினார்.
போதைப்பொருள் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றத்தாரிடம் உள்ள நட்பு களைந்து, பகைமை உருவாகிறது. உடலுக்கும் கேடு விளைவிக்கிறது. ஆகவே, போதைப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவைகளை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. இத்தகைய போதைப்பொருளை தடை செய்வதற்காகத் தான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால், போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ, மாணவியர்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும். தாங்கள் கொடுக்கின்ற தகவல்கள் இரகசியமாக காக்கப்பட்டு, போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விற்பனை தடை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற விழாவில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர், ஆவடி காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பிரம்மா குமாரிகள் ராக்கி கயிற்றை அணிவித்தனர்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், ஆவடி காவல் மாவட்ட துணை ஆய்வாளர் மகேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், ஆவடி காவல் சரக உதவி ஆணையர் புரோஷத்தம்மன், ஆவடி மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.