பதிவு:2022-08-12 13:15:41
இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களை மத்திய மாவட்ட அரசு அலுவலகங்களில் மாட்டி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்திற்கு புகைப்படத்துடன் நேரில் வந்து கோரி்க்கை
திருவள்ளூர் ஆக 12 : இந்திய ஜனாதிபதி திரவுபதி மர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்களை மத்திய மாநில அரசு அலுவலகங்களில் வைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு வந்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தலைமையில் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜகவினர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் என்பவரை நேரில் சந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரி புகைப்படங்களை மத்திய மாநில அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றும், அதற்காக முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவல் காரணமாக வெளியே சென்றிருப்பதால் விவரத்தை சொல்லிவிடுகிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததையடுத்து பாஜகவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
அதனையடுத்து திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்திலும் எஸ்பி., பெ.சீபாஸ் கல்யாணை நேரில் சந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களை கொடுத்து அலுவலகத்தில் மாட்டி வைக்க வேண்டுகோள் விடுத்தனர். புகைப்படங்களைப் பெற்றுக் கொண்ட எஸ்பி., நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் மாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாக பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், ஜெய்கணேஷ், ஆர்யா சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளர் த.பாலாஜி, நகர தலைவர் சதீஷ், தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், நகர மகளிர் அணி தலைவர் சித்ராதேவி, கடம்பத்தூர் ஒன்றிய மகளிர் அணி தலைவி சுமதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.