ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடை ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து துணைத் தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் தர்ணா.

பதிவு:2022-03-30 08:14:06



திருவள்ளூர் அருகே ஊராட்சி பணிகளில் முறைகேடு செய்து வரும் ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் தர்ணா :

ஊராட்சி மன்ற தலைவர்  முறைகேடை  ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து துணைத் தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் தர்ணா.

திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் அருகே ஊராட்சி பணிகளில் தொடர்ந்து முறைகேடு செய்து வரும் ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது, இந்த ஊராட்சியில் தலைவராக செயல்பட்டு வரும் அரிபாபு தொடர்ந்து அனைத்து ஊராட்சி பணிகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், கூட்டத்திற்கு யாரையும் அழைக்காமல் தீர்மானம் நோட்டு புத்தகத்தில் காலியாக உள்ள இடத்தில் இவரே துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலின்றி, கிராம பொதுமக்களிடமும் ஆலோசனை நடத்தாமல் இவரே போலியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது போல் எழுதிக் கொண்டு, அதைப்பயன்படுத்தி தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதகாவும் ஊராட்சி துணை தலைவர் குற்றம் சாட்டினர்.

ஊராட்சி செயலாளருக்கு தெரியாமலேயே அவரது கையெழுத்தை ஊராட்சி தலைவர் அரிபாபு போட்டு கட்டடம் உரிமம் வழங்கியது போல், பலவகை ரசீதுகளை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டி புகார் தெரிவித்தனர். ஆனால் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மேல்நல்லாத்தூர் ஊராட்சிமன்ற அலுவலக வாசலில் துணைத் தலைவர் பில்லா என்ற சதீஷ்குமார் தலைமையில் வார்டு உறுப்பினரகள் அனைவரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமாரிடம் பேசிய டிஎஸ்பி உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.